![Women's Entitlement Amount Notice of telephone number to file complaint](http://image.nakkheeran.in/cdn/farfuture/afTnkjIed3E7h1YCE25K0t80Ex4BYQDD9cwBX-ToHAE/1694941602/sites/default/files/inline-images/kanchi-2_3.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர். அதே சமயம் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து அரசால் செலுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்ததாக பெண்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள் அறிவிப்பில், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத்தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.
![Women's Entitlement Amount Notice of telephone number to file complaint](http://image.nakkheeran.in/cdn/farfuture/2Z7wOs8RWo5lUiSyqZFM-LEBSl38NaaSTcH-r1011ns/1694941683/sites/default/files/inline-images/thangam-thennarasu-file-1.jpg)
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை குறித்து அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.