புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் பலரது கணவர்கள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தைகளுடன் பெண்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதுடன் பல மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலையும் உள்ளது. மது குடிப்பதற்காக வழிப்பறிகள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் நடப்பதாக கூறி டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை மீறி அதிகாரிகள் புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏம்பல் சாலையில் வழிபாட்டுத் தலங்கள், மாணவர்கள் செல்லும் சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கூறி போராட்டம் அறிவித்ததை மீறி போலீஸ் பாதுகாப்போடு டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 400 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டதோடு பழைய டாஸ்மாக் கடைகளையும் மூடவைத்தனர். பெண்கள் திரண்டதால் டாஸ்மாக் ஊழியர்களே கடைகளை மூடினார்கள். அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதுடன் கள்ளத்தனமான மது விற்பனையையும் தடுக்க வேண்டும். மதுக்கடை இல்லாத பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் புதிய டாஸ்மாக் கடையை உடனே மூடுவதாக அறிவித்ததோடு மற்ற இரு டாஸ்மாக் கடைகளையும் 3 மாதங்களில் படிப்படியாக மூடுவதாக உறுதியளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல கடந்த மாதம் கொத்தமங்கலம் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே நாளில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.