ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் மாநாடு ஈரோட்டில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது
த.ம.மு.கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான .ஜான்பாண்டியன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
"நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்க தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும். குடும்பப் பெண்களை விதவைகளாக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை தடை செய்ய வேண்டும் இல்லையேல் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என தீர்மானிக்கும் முழு அதிகாரத்தை கிராம சபைக்கு மட்டும் தர வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களாக வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களுக்கு வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், விடுமுறை குறித்து அரசு கொள்கை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களை பாதுகாக்க கொண்டு வந்த காவலன் செயலி குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுண்கடன் திட்டம் மூலம் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் சுய உதவிக்குழு பெண்களை கடன் சுமையில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும். பெண்களை சமமாக பாவிக்கும் மனப்பாங்கை உருவாக்க பாலின சமத்துவக்கல்வியை பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகளவில் நிலுவையில் உள்ளது. இதனை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை போன்று விரைவான சட்ட நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்க வேண்டும். கேளிக்கை மற்றும் விளம்பர பொருளாக பெண்களை வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். வங்கிக் கடன் வழங்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.