பர்கூர் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொடுவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தண்ணீர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 40). ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது இரண்டு மகள், ஒரு மகனுடன் உள்ளூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் ராதா. 40க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
ஜூன் 8- ஆம் தேதி ராதா, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பவரும் ஆடுகளை அங்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில், ஜி.டி. மலை பகுதியில் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, 35 வயதுள்ள மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். தான் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கிச் செல்வதற்காக வந்ததாக கூறியவர், அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கினார். மூவரும் மாலை நேரம் வரை பேசிக் கொண்டிருந்தனர்.
அந்தி சாய்ந்ததால் ஆடுகளை மீண்டும் பட்டிக்கு ஓட்டிச் செல்வதற்காக துரை ஆடுகளைத் தேடிச்சென்றார். அப்போது ராதா மட்டும் மேய்ச்சல் நிலத்தில் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர், திடீரென்று ராதாவை வன்கொடுமை செய்துள்ளார்.
வாலிபரின் வெறிச்செயலை சற்றும் எதிர்பாராத ராதா கத்திக் கூச்சல் போட்டார். அலறல் சத்தம் கேட்டு துரை ஓடி வருவதைப் பார்த்த மர்ம நபர், அவருடைய தலையை தான் வைத்திருந்த கொடுவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே ராதா இறந்தார்.
இச்சம்பவம் குறித்து கந்திகுப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பர்கூர் அருகே உள்ள நக்கல்பட்டியைச் சேர்ந்த புல்லட் என்கிற சிம்மராஜ் (வயது 35) என்ற வாலிபர்தான் ராதாவை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
நக்கல்பட்டி மலை அடிவாரத்தில் சிம்மராஜ் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜூன் 9- ஆம் தேதி இரவு, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.