பாலியல் தொந்தரவு தர முயன்ற ஆண்களுக்கு இளம்பெண்கள் தர்ம அடி கொடுத்து, காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சென்னை லொயோலா மற்றும் கிறித்தவ கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை வண்டலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கல்லூரி முடிந்து அறைக்கு சென்றுகொண்டிருந்த இளம்பெண்களை, குடிபோதையில் இருந்த இருவர் பின்தொடர்ந்துள்ளனர். இருட்டான பகுதியை இளம்பெண்கள் கடந்தபோது, பின்தொடர்ந்த இருவரும் அவர்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் சற்றும் தாமதிக்காமல், தகாத முறையில் நடந்த ஆண்களை கூச்சலிட்டபடி சரமாரியாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாமல் அந்த இருவரும் தப்பியோடவே, அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியோடு விரட்டிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இளம்பெண்களின் இந்தத் துணிச்சலான செயல்பாடு காவல்துறை உள்ளிட்ட பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளது. குற்றம் செய்த ஆண்கள் மீது பெண்கள் பாதுகாப்பு போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.