குழந்தையின் பிறப்பு சான்று பெற கர்ப்பிணிகள் விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பிறப்பு சான்று பெறுவது கடினம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார செவிலியர்கள் மூலம் பேறுசார் குழந்தைநல பதிவேடு மற்றும் ‘பிக்மி’ என்ற இணையதள மென்பொருளில் பதிவு செய்யப்படுகிறது. மென்பொருளில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு தனித்தனியாக 12 இலக்க பேறுசார் குழந்தைநல அடையாள எண் (ஆர்சிஎச்) வழங்கப்படுகிறது.
இந்த பதிவு எண் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கர்ப்ப கால சேவையை பெறும்போது தங்கள் விவரங்களை அங்குள்ள பிக்மி மென்பொருளில் முன்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம். அதோடு, கிராம, நகர்ப்புறங்களில் அமைந்துள்ள பொது சேவை மையங்கள் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் ஆர்சிஎச் எண் பதிவிட்டால் மட்டுமே பிறப்பு சான்று பெற முடியும். இதன் மூலம் 18 வயது நிரம்பாதவர்கள் மகப்பேறு அடைவது குறித்தும் கண்காணிக்க முடியும். அதேபோல், கர்ப்பிணிகள் விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பிறப்பு சான்று பெறுவது கடினம். இவ்வாறு அவர்கள் கூறினர்.