விழுப்புரம் அருகிலுள்ள கொண்டங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(31). இவர், நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் பசுமதி. இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடும் போது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சாந்தி மீனா, ஆரோக்கியநாதன் ஆகிய இருவரும் அறிமுகமாகி உள்ளனர். அப்போது சாந்தி மீனா தனக்கு சொந்தமான 70 சவரன் நகை அடகுக் கடையில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைக்குரிய அடமான பணத்தை மட்டும் கொடுத்து நகையை மீட்டு அதை விற்று மீதி பணத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய சக்திவேல் தனது நண்பர் ஜெயசக்தி என்பவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு நண்பர்கள் ஜெயசக்தி, பசுபதி ஆகியோருடன் மறுநாளே காரைக்குடி சென்றுள்ளனர். அங்கு ஒரு ஓட்டலில் வைத்து மீனாவை சந்தித்துள்ளனர். அப்போது சாந்தி மீனா அடகுகடைக்குச் சென்று அடமான தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக தெரிந்து கொண்டு சக்திவேலை அழைப்பதாகவும் அப்போது பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். அதுவரை ஆரோக்கியநாதனை சக்திவேல் உடன் இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து சக்திவேலுக்கு போன் செய்த சாந்தி மீனா, அடமான தொகை 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்று கூறியுள்ளார். தன்னிடம் 10 லட்சம் மட்டுமே உள்ளது மீதி பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்வதாக சாந்தி மீனாவிடம் கூறியுள்ளார் சக்திவேல். உடனே சாந்தி மீனா, தனது வங்கிக் கணக்கு எண்ணை குறிப்பிட்டு அதில் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி பணத்திற்காக விழுப்புரத்தில் உள்ள தனது நண்பர் அசோக் என்பவரிடம் உடனடியாக 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தயார் செய்து சாத்தி மீனா வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.
அதன்படி விழுப்புரம் நகரில் உள்ள ஒரு கணினி மையத்தில் இருந்து ஆன்லைன் பணம் பரிவர்த்தனை மூலம் சாந்தி மீனா கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார் அசோக். பணம் 5 லட்சம் வந்ததை அறிந்த சக்தி மீனா, அங்கு ஓட்டலில் இருந்த சக்திவேலை தொடர்பு கொண்டு ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள ஒரு அடகு கடை அருகே வரும்படி கூறியுள்ளார். அங்கு சக்திவேல் தனது நண்பர்களுடன் சென்றதும், ரகசிய எண் உள்ள பூட்டப்பட்ட ஒரு நகை பெட்டி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து பத்து லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு பத்து நிமிடங்களில் வருவதாகக் கூறிவிட்டு சாந்தி மீனா ஆரோக்கியநாதனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாகியும் சாந்தி மீனா ஆரோக்கியநாதன் இருவரும் வராததால், சந்தேகம் அடைந்த சக்திவேல் நகை பெட்டியை இவர்களுடன் சேர்ந்து உடைத்து திறந்து பார்த்தபோது அதன் உள்ளே கவரிங் வளையல், கம்மல், தோடு கொண்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சக்திவேல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தி மீனா, அவருடன் இருந்த ஆரோக்கியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.