Skip to main content

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த பெண் திடீர் மாயம்; பதறும் கணவர்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

woman who came to Isha Yoga Center for training suddenly missing

 

கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த அவினாசியை சேர்ந்த பெண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

 

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோக மையத்திற்கு பயிற்சிக்காக வந்த எனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரில், “எனது மனைவி சுபஸ்ரீ திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எனது மனைவி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற ஒரு வார யோகா பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அதேபோல் கடந்த 11 ஆம் தேதி மீண்டும் அதே வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி எனது மனைவியை காலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டு சென்றேன்.

 

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கடந்த 18 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவியை கூட்டிச் செல்வதற்காக காலை 7 மணிக்கே ஈஷா யோகா மையத்தில் வந்து காத்திருந்தேன். ஆனால், 11 மணியைத் தாண்டியும் எனது மனைவி வெளியே வராததால் உள்ளே சென்று விசாரித்தேன். ஆனால், காலையிலேயே வகுப்பு முடிந்த பிறகு அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது. 

 

இந்த நிலையில், ஒரு நம்பரில் இருந்து எனது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி போன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்