சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ''கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் பற்றி நாங்களும் ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டோம். இது தொடர்பாக மகளிர் ஆணையத்தினுடைய தலைவரும் இங்கு வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார். அதன் பின்பாக மாணவிகளிடமிருந்து முறையாக புகார் வந்தது என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஆனாலும் எங்களுக்கு நியாயம் வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக பெண்கள் அவர்களுக்கு நேர்கின்ற பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்தால் அவர்களுடைய அடையாளம் வெளிப்பட்டுவிடும், அதன் வாயிலாக அவர்களுக்கு அவமானம் நடக்கும் என நினைப்பது நடைமுறையில் இருக்கக்கூடிய விஷயம். ஆனாலும் அதே சமயம் அந்த புகார்களை விசாரிக்கக் கூடிய வகையில் மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒரு பெண் காவல்துறை அதிகாரி வாயிலாக அந்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் எந்தவிதத்திலேயேயும் தவறுக்கு உடன்போகாமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்'' என்றார்.