பழமையான வீடு இடிந்து விழுந்ததில் இடர்ப்பாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் இரண்டு பெண்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது நாகையில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிவருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து பயிர்சேதம், உயிர்சேதங்களை உண்டாக்கிவருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பொதுமக்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். இதற்கிடையில், அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து மழைச்சேதங்கள் குறித்த அறிக்கையைக் கேட்டிருக்கிறார் முதல்வர்.
இந்தநிலையில், நாகூர் செய்யது பள்ளி தெருவில் உசைன் என்பவருக்கு சொந்தமான பழமையான ஓட்டுவீடு இடிந்து உயிர்சேதத்தை உண்டாக்கியிருப்பது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
நாகையை அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் உசைன். இவருக்கு சொந்தமான ஓட்டுவீட்டில் அவருடைய மனைவி ஜெகபர் நாச்சியார் (65) வசித்துவருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த வீட்டிற்கு வந்த மகள் ரெஜினா பானு (43) மற்றும் உறவினரான ஜெகபர் நாச்சியார் (70) ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர். கனமழையினால் வீட்டின் சுவர்கள் வலுவிழந்து இருந்துள்ளன. திடீரென 13ஆம் தேதி இரவு பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் மூவரும் இடர்ப்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு அவர்களை மீட்பதற்கு நீண்ட நேரம் போராடினர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு மூவரையும் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டு மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ரெஜினா பானு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடு இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.