புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர்.
இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.
ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.