தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், திருச்சியில் பெண் சிறை வார்டன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (24). திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாகப் பணியாற்றி வரும் இவர் அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று 03.02.2019 மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரெனத் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த வாரத்தில் அரியலூர் மாவட்டம் வானதிரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முத்து (26) திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றி வந்தார். போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள தமிழகக் காவல்துறையின் சிறப்புக் காவல்படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் என்ற இரண்டாம் நிலைக் காவலர் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் செந்தமிழ் செல்வி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.