தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் முனிய செல்வி என்பவர் மாணவர்களுக்கு காலை உணவு சமைத்து வழங்கி வருகிறார்.
இதனால் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் இன்று கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கனிமொழி அங்கிருந்த மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதன் பின்னர் அவரும் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்நிலையில் இது குறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “இன்று தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சமையலராகப் பணிபுரிந்துவரும் முனிய செல்வியைச் சந்தித்தோம். மனவுறுதியுடன் தனது பணியைத் திறம்படச் செய்து வரும் அவருக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.