பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (19.11.2021) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். பல்வேறு துறைகள் சார்பில் 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது, “கடந்த 6 மாதத்திற்கு முன்பு திமுகவை வசைபாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாமக எம்.எல்.ஏ.க்கள் கூட தற்போது தமிழக அரசைப் பாராட்டிவருகின்றனர். பொதுமக்கள் உள்பட எல்லோரும் வாழ்த்தும் நல்லாட்சி நடந்துவருகிறது. தற்போது முதல்வரின் முகவரி என்ற தனித்துறையை உருவாக்கி, அலுவலர்களை நியமித்து, மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் பாலங்களைத் தவிர வேறு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது மக்கள் அளித்துள்ள மனுக்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.” இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், ''சிறப்பு குறைதீர் கூட்டங்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 75 சதவீத மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். முகாமில் பெறப்படும் மனுக்கள் மீதான தொடர் நடவடிக்கையாக வரும் 26ஆம் தேதி சேலத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதில், கல்வித்தகுதிக்கு ஏற்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சாலைகள் அடைப்பு உள்ளிட்ட பல நெருக்கடி கொடுத்தனர். 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தச் சட்டம் வருவதற்கு அப்போதைய அதிமுக அரசுதான் காரணம். தற்போது வாபஸ் பெற்றது முதல்வருக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி'' என்றார்.
முன்னதாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வரவேற்றார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திமுக சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம். செல்வகணபதி (மே), எஸ்.ஆர். சிவலிங்கம் (கி), பார்த்திபன் எம்.பி., உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.