வில்லிசை வேந்தர் எனப் போற்றப்படும் சுப்பு ஆறுமுகம் காலமானார். அவருக்கு வயது 93.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வில்லிசைப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (10/10/2022) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தமது 14 ஆவது வயதிலேயே குமரன் பாட்டு என்ற கவிதைத் தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்தியடிகளின் சுய சரிதையை முதன் முதலாக வில்லுப்பாட்டாகப் பாடினார்.
கலைவாணரின் 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் சுமார் 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி திரைத்துறையிலும் பங்காற்றியவர் சுப்பு ஆறுமுகம். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என ஏராளமான கதைகளை தமது வில்லுப்பாடல் நிகழ்ச்சிகள் மூலம் எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
வில்லிசை வேந்தர் எனப் போற்றப்படும் சுப்பு ஆறுமுகத்திற்கு கடந்த 2005- ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும், 2021- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.