டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு உறுதி செய்யட்ட நிலையில், எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடந்த முறைகேடு நிரூபிக்கப்பட்டதால், 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு ரூ.7.5 லட்சம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டு, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, இவ்விருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில், இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து ஏமாந்த சில தேர்வர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெறாமல் ஏமாற்றமடைந்தவர்கள் மொத்தம் 63 பேர் எனத் தெரியவந்துள்ளது.
இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனோ, அவர் குறித்த எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த முறைகேடு தொடர்பாக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலர் சிக்கவிருப்பதாக அந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதனால், ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 - 2019 தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.