தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவியதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பின் கரோனா பரவலின் தாக்கம் குறைந்து கட்டுக்குள் வந்ததும் மீண்டும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, ஏனைய வகுப்புகளும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளிலிருந்து கருத்துகள் வரத்துவங்கின. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் பள்ளிக் கல்வித்துறை கலந்தாலோசித்தது.
இந்நிலையில், திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். இதில் சிலர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என்றும், சிலர் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்தந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். வருகிற 30ஆம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.