நேற்று (29.06.2021) ஜெ. பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, ராமதாஸ், மாவட்ட மாணவரணி சக்திவேல், ஜெ. பேரவை ராமதாஸ், நகர துணைச் செயலாளர் செந்தில் உட்பட பலரும் இருந்தனர். அங்கு வருகைதந்த சி.வி. சண்முகம் பத்திரிகை ஊடகத்தினரிடம், “கடந்த அதிமுக ஆட்சியில் வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். அதைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ. பல்கலைக்கழகம் என்று புதிதாக துவக்கப்பட்டது.
அதற்கு துணைவேந்தரும் நியமிக்கப்பட்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க இனிமேல் மீண்டும் பழைய முறைப்படி திருவள்ளுவர் பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் வரையறை எல்லைக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் விளம்பரம் செய்துள்ள நோக்கம் என்ன? வேலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்தபோது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க அங்கு விண்ணப்பித்தனர்.
மேலும், கல்லூரி சம்பந்தமாக பல்கலைக்கழகத்திற்கு வேலூர் சென்றுவர மிகுந்த சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ பல்கலைக்கழகம் என புதிதாக முறைப்படி துவக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. தற்போது ஏதோ உள்நோக்கத்துடன் மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை மேற்படிப்புக்காக மாணவர்கள் அணுக வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? மாணவர்களின் எதிர்காலம் கருதி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதை முடக்க நினைப்பது தவறு. உயர்கல்வித் துறை செயலர் இச்செயலில் ஈடுபட்டுவருகிறார்.
இதனால் முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் நல்ல பெயர் எடுத்து, மேலும் நல்ல பதவிகளைப் பெறும் நோக்கத்திலும், ஜெ பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் பல்கலைக்கழகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலர் செயல்படுகிறார். கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே உயர்கல்வி படிப்பதற்கான மாணவர்கள் சேர்க்கையை ஜெ. பல்கலைக்கழகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.