Skip to main content

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பள்ளிகள் திறப்பது சரியாக இருக்குமா..? - ராஜேஸ்வரி பிரியா கேள்வி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

gh

 

கரோனா காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குச் செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் வகுப்புக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் முதல் தேதியிலிருந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி துவங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி, நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் (1 ம்‌ வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை) திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வளவு நாட்கள் கழித்து பள்ளிகளைத் தீபாவளி சமயத்தில் திறப்பது என்பது மிகுந்த பாதிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது பொதுவாகவே எல்லா இடங்களிலும் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை . இன்னும் நோய்த்தொற்று முழுமையாகக் குறைந்தபாடில்லை, தடுப்பூசியும் முழுமையாகச் செலுத்தி முடியவில்லை. 

 

மக்கள் கூட்டம் கூட்டமாகப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வார்கள். இப்படி இருக்கின்ற சூழலில் தீபாவளி வாரமாகிய நவம்பர் 1ம் தேதி சிறு குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிக்குச் செல்வது என்பது அனைத்து பெற்றோருக்கும் மனதில் ஒருவிதமான பயத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. நீங்கள் கூறியவாறு பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் குழந்தைகள் கல்வி அறிவில் பின் தங்குவார்கள் என்பது உண்மைதான் அதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தது வீணாகும் வகையில் பண்டிகை காலகட்டத்தில் திறப்பது சரியாக இருக்குமா என்பதை அரசு கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

 

தீபாவளி பண்டிகை முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது என்பது ஓரளவிற்குச் சரியானதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக இந்த கோரிக்கையினை  முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் வைக்கின்றோம். கண்டிப்பாக அரசு இந்த கோரிக்கையினை ஏற்று முடிவினை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்