சேலத்தில், இரண்டு குழந்தைகளின் தாய் மீது திராவகம் (ஆசிட்) வீசிய மர அறுவை மில் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் குகை லோகுசெட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். கார் ஓட்டுநர். இவருடைய மனைவி காயத்ரி (31). இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் கு-ழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் லைன்மேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
குடும்ப பொருளாதார கஷ்டத்தை சமாளிக்க காயத்ரி, அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கணக்காளர் வேலைக்குச் சென்று வந்தார். அந்த மில்லில் வேலை செய்து வந்த சீனிவாசன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் 'நெருங்கி' பழகி வந்தனர்.
தனது மனைவி சீனிவாசனுடன் 'நெருங்கி பழகி' வருவதை அறிந்த பாலமுருகன், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். சீனிவாசனுடனான 'தொடர்பை' உடனடியாக கைவிடுமாறு காயத்ரியை பலமுறை எச்சரித்து வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சீனிவாசனையும், பாலமுருகன் எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது.
ஆனாலும் சீனிவாசனுடனான தொடர்பை உடனடியாக கைவிட முடியாமல் காயத்ரி தவித்து வந்தார். இதை மையப்படுத்தி குடும்பத்தில் அடிக்கடி தகராறு வெடித்ததால், காயத்ரி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு குகை பகுதியில் உள்ள தனது தாயார் இந்திராணி வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்குதான் கடந்த 5 மாதமாக தங்கி உள்ளார். இதற்கிடையே, சீனிவாசனுடன் பேசுவதையும் தவிர்த்தார்.
கடந்த சில நாள்களாகவே சீனிவாசன் காயத்ரியை சந்தித்து, தன்னுடன் பழையபடி பேசுமாறு கேட்டுள்ளார். அதற்கு காயத்ரி, 'நம்முடைய பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் வருகின்றன. இனிமேல் உன்னுடன் பேச மாட்டேன்,' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 15, 2018) காலை குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு காயத்ரி, தாயார் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசன், தன்னுடன் பேசுமாறு மீண்டும் அவரை வற்புறுத்தினார். அப்போதும் மறுத்த காய்த்ரியை, 'என்னுடன் பேசாத நீ இனி யாருடனும் பேசக்கூடாது,' என்று கூறியவாறே, தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) காயத்ரி மீது ஊற்றிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் காயத்ரியின் தோள்பட்டை, மார்பு, கால், முகத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் திராவக வீச்சால் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு 40 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் இரண்டு குழந்தைகளின் தாய் மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை செவ்வாய்ப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.