திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, கரடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தோட்டங்களுக்கு அருகில் வேலாமலை மலைப்பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகிலுள்ள தோட்டங்களை நோக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்ணீர் தேடி வந்த பத்து வயதுள்ள ஆண் காட்டெருமை ஒன்று, கரடிப்பட்டியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான 60 அடி கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
தண்ணீர் இல்லாத இந்தக் கிணற்றில் விழுந்ததால் யாருக்கும் தெரியாத நிலையில் உணவின்றி இறந்துபோனது. இந்த நிலையில் நேற்று (06.08.2021) கடும் துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்து கிணற்றுக்குள் பார்த்தபோதுதான் காட்டெருமை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றில் இறங்கி சுமார் 4 மணி நேரம் போராடி, கிரேன் மூலம் கயிறு கட்டி உடலை மீட்டனர். மீட்கப்பட்ட பின்னர் கிணற்றின் அருகிலேயே கால்நடை மருத்துவர் உடற்கூறாய்வு செய்து, அப்பகுதியிலேயே காட்டெருமையைப் புதைத்தனர்.