இந்தியாவில் இருந்து பிழைப்பிற்காக தன் குடும்பங்களைத் தவிக்கவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்யும் பல இளைஞர்கள் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு தவியாய் தவித்துவரும் நிலையில், மர்மமான முறையில் இறப்பவர்களை ஊருக்கு கொண்டுவர முடியாமல் அவர்களது குடும்பத்தினர் படாதபாடு பட்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ் (35), 2019ஆம் ஆண்டு பிழைப்பிற்காக தன் மனைவி மற்றும் 5 வயது கூட நிரம்பாத இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு சவுதி அரேபியா சென்று ஓட்டுநராக வேலை செய்துள்ளார். கரோனா ஊரடங்கு முடிந்து ஊருக்கு வந்து குழந்தைகளைப் பார்க்கனும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், 24ஆம் தேதி விபத்தில் இறந்துவிட்டார் என்று அவரது நண்பர்கள் சொன்ன தகவல் மனைவி உமாமகேஸ்வரி மற்றும் உறவினர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
“குழந்தைகளைப் பார்க்க வருவேன்னு சொன்னவர் சடலமாக கிடப்பதாக சொல்றாங்களே” என்று கதறும் உமாமகேஸ்வரி, “என் கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள்” என்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மனு கொடுத்துவிட்டு கணவரின் உடலையாவது பார்க்க உணவு கூட இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார். தாயின் அழுகை எதற்கு என்பது அறியாமல் நிற்கிறார்கள் குழந்தைகள்.
மாவட்ட நிர்வாகமும் மத்திய, மாநில அரசுகளும் முனைப்புக் காட்டினால் ராஜேஷ் உடலை விரைவாக கொண்டு வரலாம்.