
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(31). இவருக்கும் கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் பார்த்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி கவி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால், அவரது கணவரும், உறவினர்களும் கவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த செந்தில்குமார், வேப்பூர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், வேப்பூர் அருகிலுள்ள இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி(36), என்பவருடன் கவிக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார், நேற்றுமுன்தினம் வேப்பூர் காவல் நிலையத்தில் ரவி மீது புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செந்தில்குமார் தனது மனைவியின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டின் மேற்கூரையில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.