Skip to main content

இந்தச் செய்தியை இந்திய அரசு அறியாதது வினோதமாக இருக்கிறது... கே.எஸ்.அழகிரி

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவில் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் அதைப் பரிசோதனை செய்வதற்கு உரிய கருவிகளும், ஆய்வகங்களும் இல்லாத நிலை ஏற்பட்டது. நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே மத்திய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கியதால் பெருகிவரும் மக்கள் எண்ணிக்கையை ஈடுகட்டுகிற வகையில் மருத்துவர்களையோ, கட்டமைப்பு வசதிகளையோ பெருக்கிக்கொள்ள முடியவில்லை.
 

 

 

K. S. Alagiri



கரோனா தொற்றுநோயைத் துல்லியமாகச் சோதனைசெய்து கண்டறிய போதிய பி.சி.ஆர். ஆய்வகங்கள் இல்லாத நிலையில் பெருகிவரும் நோயாளிகளைப் பரிசோதிக்க முடியவில்லை. உலக நாடுகளிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் சோதனை செய்யும் நாடாக இந்தியா இருந்தது. இந்நிலையில் துரித பரிசோதனை கருவி மூலம் அரைமணி நேரத்தில் கரோனா தொற்றை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புச் சக்தி உடலில் உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்துவிட்டு பிறகு பி.சி.ஆர். சோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவெடுத்தது. அதன் ஒப்புதலின் பேரில் அரைமணி நேரத்தில் சோதனை செய்யக்கூடிய 7 லட்சம் துரித சோதனை கருவிகள் சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு கொள்முதல் செய்தது. அதே போல தமிழக அரசும் 4 லட்சம் கருவிகளுக்கு கொள்முதல் ஒப்பந்தம் போட்டு 24 ஆயிரம் கருவிகளை முதல் தவணையாக பெற்றுள்ளது. மத்திய அரசு மூலமாக 12 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைத்தன.
 

இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய கருவிகளை ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோயாளிகளிடம் சோதனை செய்ததில் 5 சதவீதம் தான் சரியான முடிவு வெளிவந்தது. அந்தக் கருவியின் துல்லியத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டது. நீண்ட சோதனைகளுக்குப் பிறகு துரித பரிசோதனை கருவிகள் மூலம் துல்லியமாகச் சோதனைகளைச் செய்யமுடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் ராஜஸ்தான் அரசு முறையிட்டது. இதைப்போல கேரளாவும், தமிழ்நாடும் கருவிகளின் துல்லியத்தன்மை குறித்து புகார் தெரிவித்துள்ளன. இதையொட்டி ரேபிட் டெஸ்ட் கருவி சோதனைகளை ஐ.சி.எம்.ஆர். இரண்டு நாட்களுக்குத் தடை செய்தது.
 

http://onelink.to/nknapp

 

சீனாவிடமிருந்து இந்தியா ரேபிட் டெஸ்ட் கருவிகளைக் கொள்முதல் செய்ததைப் போல ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஸ்பெயின் நாடு 6 லட்சம் கருவிகளையும், செக்கோஸ்லோவாக்கியா 3 லட்சம் கருவிகளையும், பிரிட்டன் அரசு 1 லட்சம் கருவிகளையும் கொள்முதல் செய்தது. ஆனால் அவை நோயாளிகளின் சோதனைக்குத் தகுதியற்றவை என்று அறிந்த பிறகு சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டன. அதற்காக ஏற்கனவே செலுத்திய பணத்தையும் அந்தந்த அரசுகள் திரும்ப பெற்றுக்கொண்டன. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. இதை இந்திய அரசு அறியாதது வினோதமாக இருக்கிறது.
 

 

உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட துரித சோதனை கருவிகளின் தரத்தைத் தெரிந்துகொண்டு திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன் என்று தெரியவில்லை.  இந்தக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கு  இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என்பது புரியாதப் புதிராக உள்ளது. ஆனால் பிரதமரின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரக்குவியலின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை எந்த முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்லை. 
 

சீன நாட்டிலுள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் மத்திய அரசு வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்தக் கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் இந்த நிறுவனத்திடம் கருவிகளை வாங்காமல் ரூபாய் 600 அதிக விலை கொடுத்து சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது.
 

எனவே கரோனா நோயாளிகளுக்குத் தரம் குறைந்த துல்லியமாகச் சோதிக்க முடியாத ராபிட் சோதனை கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். இந்த உபகரணங்கள் மூலம் நோயாளிகளைத் துல்லியமாகச் சோதனை செய்யமுடியுமா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும். அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக நோயாளிகளைப் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்