புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளுக்கு வந்த கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக எந்த சிகிச்சைக்கு, எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் முதலில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சிகிச்சை தொடங்குகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கர்ப்பிணிகள் சுமார் ஆயிரம் பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 34 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 24 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும் 10 பேருக்கு சுகப்பிரசவமும் பார்க்கப்பட்டு குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மற்றவர்களுக்கு தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறும் போது, கர்ப்பிணிகளுக்கும் அவர்களின் கணவர்களுக்கும் சில மாதங்கள் வரை ஹெச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதரா நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கும் கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில்தான் கடந்த 2 மாதங்களில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் அனுப்பி வருகிறோம். இதுவரை 34 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதகைள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வீடுகளுக்குச் சென்றவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தினசரி தொலைபேசி மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அனைவரும் அச்சமின்றி இருக்கிறார்கள் என்றனர்.