கரூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக 27 வயது பெண் ஒருவர் பணிபுரிந்துவருகிறார். இவர் கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவரின் செல்ஃபோன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து ஒரு பெண்ணின் ஆபாச படம் வந்தது.
பின்னர் அந்த ஆசாமி, எனது கணவரின் செல்ஃபோனுக்கு தொடர்புகொண்டு இதேபோன்று உனது மனைவியின் ஆபாசப்படம் என்னிடம் உள்ளது என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எனது கணவர், ஆன்லைன் மூலம் 49 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த ஆசாமி எனது கணவரை தொடர்புகொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார்.
எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதன் பின்னர் இதற்குப் பயன்படுத்திய செல்ஃபோன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவற்றைக் கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார், பொள்ளாச்சியைச் சார்ந்த சிவில் இன்ஜினியராக பணியாற்றும் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார் (49) என்கிற கொத்தனாரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்ஃபோன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.