நாமக்கல் அருகே, மனைவியின் தவறான தொடர்பைக் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கூலிப்படையை ஏவி முன்னாள் ராணுவ வீரரை திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் சிவகுமார் (42). ராணுவத்தில் பணியாற்றிவந்த இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றார். இவருடைய மனைவி பார்கவி (28). சொந்த ஊரில் மனைவி, குடும்பத்துடன் சிவகுமார் வசித்துவந்தார். ஜூலை 5ஆம் தேதி இரவு, நல்லையம்பட்டியில் உள்ள தனது சகோதரி சித்ராவின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றார்.
குமரிபாளையம் பனங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். சிவகுமார் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் காவல் நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட சிவகுமாரின் மனைவிக்கு வெளியே ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், அதனாலேயே இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. சிவகுமார், ராணுவத்தில் பணியாற்றிவந்தபோது பார்கவி, உள்ளூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் நெருங்கிப் பழகிவந்துள்ளார்.
ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சொந்த ஊர் திரும்பிய சிவகுமாருக்கு, மனைவியின் தவறான தொடர்பு பற்றி தெரியவந்தது. ஆரம்பத்தில் மனைவியை லேசாக கண்டித்துவந்தார் சிவகுமார். ஆனால், பார்கவி மீண்டும் மீண்டும் தொடர்பை வளர்த்துவந்துள்ளார். இதனால் மனைவியை அவர் அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். கணவர் உயிருடன் இருக்கும்வரை செல்வராஜூடனான தொடர்பை தொடர முடியாது எனக் கருதிய பார்கவி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுகுறித்து செல்வராஜிடமும் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் கூலிப்படையை வைத்து சிவகுமாரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளனர். இதற்காகவே தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பார்கவியும் செல்வராஜும், கடந்த 5ஆம் தேதியன்று சிவகுமார் இரவு நேரத்தில் தனியாக அவருடைய சகோதரி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பார்கவி, செல்வராஜ் ஆகியோரை உடனடியாக தூக்கிய காவல்துறையினர், தொடர்ந்து அவர்களிடம் துருவித் துருவி விசாரித்துவருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான உறவால் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவம் ராசிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.