சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவருடைய மனைவி விமலாராணி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த ஆத்தனஞ்சேரி திருமகள் நகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்துவந்தனர். தங்கவேல் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், தங்கவேலின் செல்ஃபோனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தங்கவேலின் மனைவி விமலாராணி ஃபோனை எடுத்து, தனது மகன் ஆன்லைன் வகுப்பிற்காக ஃபோனைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 1ஆம் தேதியும் தங்கவேலின் சகோதரர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அழைப்பை ஏற்கவில்லை. அதனால் இரண்டாம் தேதி காலை 9:30 மணியளவில் மறுபடியும் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என வந்ததால் சக்திவேல் சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து தங்கவேலின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்தது. இந்நிலையில், தங்கவேலின் தந்தை சோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன், மருமகள், பேரன் ஆகியோரைக் காணவில்லை என புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், 10ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் காணமல் போன விமலாராணி தனது மகனுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அப்போது தங்கவேல் கொலையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு தங்கவேல் விமலாராணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதே வேளையில், சேலத்தில் வசித்து வந்தபோது பக்கத்து வீட்டிலிருந்த ராஜா என்பவருடன் விமலாராணிக்கு காதல் மலர்ந்துள்ளது. மனைவியின் சரியில்லாத போக்கை உணர்ந்த தங்கவேல், தனது வேலையை வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு சோமங்கலம் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ஏழு வருடங்களாக செல்ஃபோனில் தொடர்ந்துள்ளது விமலாராணியின் காதல். தங்கவேல் வீட்டில் இல்லாத நாட்களில், ராஜா வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனையறிந்து தங்கவேல் தன்னைக் கண்டித்தும் தனது காதலைக் கைவிடவில்லை என கூறியுள்ளார் விமலாராணி. இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி தங்கவேலுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விமலாராணி, அரிவாள்மனையை எடுத்து தங்கவேலை வெட்டிக் கொலை செய்ததாக போலீசிடம் கூறியுள்ளார்.
அன்று இரவு 10 மணிவரை பெட்ரூமில் சடலத்தை மறைத்துவைத்து, சேலத்திலிருந்து ராஜாவை வரவழைத்து அருகில் இருக்கும் ஏரியில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தங்கவேலுவின் சடலத்தை மீட்க நினைத்த காவல்துறையினர், ஏரியில் இறங்கி சோதனையிட்டபோது அங்கு எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மீண்டும் விமலாராணியிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தேடும் பணியை நிறுத்திவிட்டு, இரண்டாவதாக அவர் சொன்ன தொழுப்பீடு பகுதியில் இருந்த பாதி எரிந்த ஆண் சடலத்தை எடுத்து பார்த்தபோது அதுதான் தங்கவேலுவின் சடலம் என உறுதி செய்தனர். மேலும், அடையாளம் தெரிந்திடக் கூடாது என்பதற்காகவே ராஜா சடலத்தை எரித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தங்கவேல் காணமல் போன வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய மணிமங்கலம் காவல்துறையினர், மனைவி விமலாராணியை கைது செய்தனர். இதில் கொலைக்கு உடந்தையாக இருந்த காதலன் ராஜாவை தேடிவருகின்றனர்.