கொத்தாளமுத்துவைக் காதலித்துக் கைகூடும் வாழ்க்கை, தன் உயிரையும் குழந்தை உயிரையும் பறித்துவிடும் எனக் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் காயத்ரி. ஆனால், காயத்ரியும் அவளுடைய 4 மாத ஆண் குழந்தையும் மர்மமான முறையில் வீட்டில் பிணமாகக் கிடந்தனர்.
என்ன நடந்தது?
கொத்தாளமுத்துவும், காயத்ரியும் சிவகாசி அருகிலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்தபோதே, கொத்தாளமுத்து வீட்டில் ‘இவன் சரியில்லாதவன்.. திடீர் திடீரென்று ஒருமாதிரி நடந்துகொள்வான்..’ என எச்சரித்துள்ளனர். ஆனாலும், காதல் மீதான நம்பிக்கையில் கொத்தாளமுத்துவைக் கரம் பிடித்தாள், தனியார் பள்ளி ஆசிரியையான காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறக்க, கோகுல் ரக்சன் எனப் பெயர் வைத்தனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கொத்தாளமுத்து எந்த வேலைக்கும் போகவில்லை. அதேநேரத்தில், காயத்ரியின் 30 பவுன் நகையை விற்று செலவழித்துவிட்டான். அதனால், வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான், கொத்தாளமுத்து தலைமறைவாகிவிட, அந்த வீட்டின் மாடியில் உயிரற்ற சடலங்களாகக் கிடந்தனர், காயத்ரியும் குழந்தை கோகுல் ரக்சனும்.
உடலில் ஒரு காயமும் இல்லாத நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில், விஷம் குடித்து காயத்ரி உயிரைவிட்டதும், குழந்தை கோகுல் ரக்சன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொத்தாளமுத்து இன்னும் பிடிபடாத நிலையில், விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ‘விஷத்தைக் குடித்துச் செத்துவிடு. இல்லையென்றால் தலையணையால் அமுக்கி குழந்தையைக் கொன்றுவிடுவேன்..’ என்று காயத்ரியை கொத்தாளமுத்து மிரட்டியிருக்கக்கூடும். காயத்ரி விஷத்தைக் குடித்ததும், குழந்தையைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கக்கூடும்.’ எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
தலைமறைவான கொத்தாளமுத்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கி வாக்குமூலம் அளிக்கும்போதுதான், இருவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.