கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலானது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலானது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு நேர முடக்கம் அமலுக்கு வந்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்திற்கும் நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏன்? இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைதோறும் ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியுமா? பகலில் மனிதர்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் கரோனா பரவலை கட்டுப்படுத்தலாம். ஆனால், இரவில் மட்டும் ஊரடங்கு விதித்து என்ன பயன். இது எந்த அளவிற்குப் பயன்தரும் எனப் பலரும் சந்தேகம் எழுப்பிவரும் நிலையில், அரசின் இந்த இரவு நேர ஊரடங்கு குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்பொழுது நிலைமை சரியாக இல்லை என்று உணர்த்தவும் இந்த இரவு நேர ஊரடங்கு வழிவகுக்கும் எனக் கூறும் அதிகாரிகள், இதன் காரணமாக மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்ப்பர். இதனால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும். இரவு நேர தொலைதூரப் பயணங்கள் தவிர்க்கப்படும். இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் பெரிய அளவு பாதிக்கப்படாது. இதனால் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கரோனா பரவல் தடுக்கப்படுவதுடன் உதவித்தொகை என்ற பெயரில் சில ஆயிரம் கோடிகளை தரும் நிதிச்சுமையும் அரசுக்குக் குறையும் என்கிறார்கள் அதிகாரிகள்.