Skip to main content

ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது ஏன்..?

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Why the Rs 25 crore dam broken.. ?

 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த தகவலையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ.கணேசன் என ஏராளமான தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டுவந்து அனைவரும் உடைந்த அணைக்கட்டுப் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போராட்டம் நீடித்தது. இதையடுத்து, கடலூர்  துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் எஸ்.பி. பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில்  போராட்டம் முடிவுக்கு வந்தது. 

 

இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டப் பிறகு மூன்று முறை அணை நிரம்பியுள்ளது. அணை உடையவில்லை. அருகே உள்ள தடுப்பு சுவர் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அது இயற்கையாக ஏற்பட்டதா அல்லது மனித தவறினால் ஏற்பட்டதா என்பது குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

சேதமடைந்த தடுப்பு சுவர் பணிகளை முடிப்பதற்காக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்டப்படும்” என்று கூறினார். 

 

இதையடுத்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகர், தடுப்பணை உடைந்தது சம்பந்தமாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகிய நான்கு அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்தத் தடுப்பணை கட்டிய ஒப்பந்த நிறுவனம் நாமக்கல்லைச் சேர்ந்த பிரமுகருடையது என்றும், இந்த நிறுவனம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு குடியிருப்பையும் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நான்கு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது என்றும் தெரிய வந்தது. எனவே தரமில்லாமல் கட்டப்பட்டதால் தடுப்பணை உடைந்தது என்ற குற்றச்சாட்டையடுத்து மேற்படி நிறுவனம் செய்து வரும் பணிகளில், எந்த அளவுக்கு தரமாக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது என்பதை ஆய்வு செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்