Skip to main content

எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மெளனியாக இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
M. K. Stalin


“தன்னுடைய பினாமி வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு குறித்தும், கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மெளனியாக இருப்பது ஏன்?” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் “நட்சத்திர” ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ள நாகராஜன் - செய்யாதுரையின் அனைத்து நிறுவன அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் அந்த வருமான வரிச்சோதனை பற்றி நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

 

 

“கான்டிராக்டர், உறவினர் வீடுகளில் 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. கார்களில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைத்தது அம்பலம்” என்று "தினத்தந்தி "நாளிதழ் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது. “இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாயையும் சேர்த்து 150 கோடி ரூபாயும், 100 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது” என்றும் வருமான வரித்துறையில் உள்ள “சோர்ஸ்” அடிப்படையில் “இந்து ஆங்கில இதழ்” முதல் பக்கத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

“நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. 110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்” என்றும், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தமிழக அளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளிகளை எடுத்து, சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்றும் “தினமணி” நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது. “120 கோடி ரூபாய் பறிமுதல்” என்று செய்தி வெளியிட்டிருக்கும் “தினமலர்” நாளிதழ், “எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோன்ஸ் என்பவரது வீட்டில் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபக் என்பவரின் காரில் 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ் என்பவரின் காரில் 25 கோடி ரூபாயும், ரவிச்சந்திரன் காரிலிருந்து 24 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. எஸ்.பி.கே நிறுவனத்துக்கும் மாநில அரசின் அதிகார மையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த சோதனை மேலும் தீவிரமடையும்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

“நெடுஞ்சாலைத்துறையில் 7,940 கோடி ரூபாய் டெண்டர் எடுத்த கான்டிராக்டர் வீடு, ஆபிசில் ஐ.டி. ரெய்டு. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல். இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு” என்று “தினகரன்” நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி - உள்பட இன்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ள வருமான வரித்துறை ரெய்டு பற்றிய தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கின்றன. அதிமுகவின் “டெண்டர் ராஜ்யம்” எப்படி ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் வெட்கம் - நாணமின்றி உலா வருகிறது என்பதை எல்லோர்க்கும் உரைத்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது.
 

eps


முதலமைச்சரின் “பினாமி”யாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதலமைச்சரின் சம்பந்தியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதலமைச்சர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார். வருமான வரித்துறை சோதனை மேலும் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூட, மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல், முதலமைச்சர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது “ஊழல் ராஜ்யம்” பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதலமைச்சரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

ஒரு முதலமைச்சரே உறவினர்களை வைத்து டெண்டர் எடுப்பது “பொது வாழ்வில்” தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது. அதுவும் தனது துறையிலேயே ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க வைத்து “கமிஷன்” பார்ப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான கருப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது. தனது சம்பந்தி பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்ததன் மூலம் “அரசியல் சட்டப்படி செயல்படுவேனே தவிர யாருக்கும் சாதகமாகச் செயல்பட மாட்டேன்” என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார். ஊழலுக்கு விளக்கம் அளிக்கவும் முன்வராமல், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் முன் வராமல் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “மவுனியாக” இருப்பது தமிழ்நாட்டிற்கு இழிவையும் பெருத்த தலைகுனிவையும் தந்திருக்கிறது.

 

 

 

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரமான விசாரணைக்கு நியாயமான வழி விட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதலமைச்சரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த டெண்டர்களில் கைமாறிய "கமிஷன்" குறித்து விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.