தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்கள் தங்களின் அடையாள வீரனாக, தலைவனாக கொண்டாடுவது, சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையை. வெளிவராத சின்னமலையின் தியாக வரலாற்றை ஈரோட்டை சேர்ந்த ஆய்வாளர் புலவர் ராசு என்பவர் வெளிக்கொண்டு வந்தார். சின்னமலைக்கு புகழ் செய்யும் பொருட்டு மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தீரன் சின்னமலையின் பூர்வீகமான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமத்தில் சின்னமலையின் சிலை, நினைவு மணிமண்டமும் சென்னையில் சிலை அமைத்தும் பெருமை சேர்த்தார்.
வெப்படையை சேர்ந்த கொங்கு செங்கோட்டையன் என்பவர் முயற்சியால் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு தனியார் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டு அச்சமூக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து E.R.ஈஸ்வரன் தலைமையில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீரன் சின்னமலை புகழை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றது. இதன் பலனாக கடந்த 20 ஆண்டுகளாக சின்னமலையின் நினைவு தினம் உள்ளுர் விடுமுறை விடப்பட்டு அரசு நிகழ்வாக நடத்தப்படுகிறது.
03.08.2022 (ஆடி18) புதன்கிழமை தீரன் சின்னமலையின் 217 வது ஆண்டு நினைவு தினம் ஒவ்வொரு அரசில் கட்சி மற்றும் அமைப்பு தலைவர்கள் நேரில் வந்து புகழ் அஞ்சலி செய்ய வழக்கம்போல் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்வருடம் திடீரென முக்கிய வி.வி.ஐ.பி. வருகிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகவே 3 ந் தேதி காலை சென்னையிலிருந்து ஓடாநிலை கிராமத்திற்கு வருகிறார். மதியம் 12 மணி முதல் 1.30 வரை ஆளுநர் ரவி அவர் சிலைக்கு மாலை அணிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநருடன், பா.ஜ.க. அண்ணாமலை மற்றும் ஆதீன, சமய தலைவர்கள் சிலரும் உடன் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.