'நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
இன்று கூடலூர் சட்டமன்றத் தொகுதியின் பந்தலூர் கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய சீமான், ''400 கோடி ரூபாய்க்கு பொங்கலுக்கு மட்டும் குடித்துள்ளார்கள். தீபாவளிக்கு 600 கோடிக்கு குடித்துள்ளார்கள். இது அரசு அறிவித்த செய்தி. உண்மையிலேயே ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது. ஆனால் பத்திரிகையில் அரசு வெளியிட்டது 600 கோடி.
எனக்கு ஒரே ஒரு கேள்விதான் 600 கோடிக்கு ஒரு நாளைக்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம். ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் 250 கோடி வசூல். ஒரு படத்திற்கு, ஒரு பொழுதுபோக்கிற்கு, கேளிக்கைக்கு இவ்வளவு கொட்டிக் கொடுக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம். ஆண்டு ஒன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வசூல் ஆகிறது டாஸ்மாக்கில். ஆனால் இவர்கள் இந்த இலவசத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி உள்ளிட்டவைகளை கொடுக்க 5000 கோடி ரூபாய் இழப்பார்களா.
இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவசம் பஸ் என்று சொல்கிறார்கள் முதலில் பஸ் பாஸாக இருக்கிறதா? பேருந்துக்குள் மழை பெய்கிறது. நமது சகோதரிகள் பேருந்துக்குள் குடை பிடித்துக்கொண்டு போகிறார்கள். கொடுமைக்காரர்களுக்கு ஓட்டை போட்டுவிட்டு எங்களை ரோட்டில் விட்டுவிட்டு கத்த விடுகிறீர்கள். எட்டு வழி சாலை எல்லாம் போட முடியாது. பரந்தூரில் விமான நிலையம் கட்ட முடியாது. விடமாட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனையை 20 ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்களே அது மாதிரி வேண்டுமானால் கட்டலாம். அதில் ஒரு கல்லை நட்டு விட்டு போனார்கள். அதையும் உதயநிதி எடுத்துக்கொண்டு போய்விட்டார். நானும் அதேதான் சொல்கிறேன். பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக் கொண்டு போய்விடுவேன்.
சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது உனக்கு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். ரஷ்யாவிற்கும் உக்கிரைனுக்கும் போர் நடந்தபொழுது அங்குத் தவித்துக் கொண்டிருந்த நமது மாணவர்களை அழைத்துக் கொண்டு வர நமக்கென ஒரு விமானம் இல்லை. அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டு, அதன் பிறகு ஒரு தேர்தல் வருகிறது. அதையாவது நாம் மாறுதலுக்கான தேர்தலாக எடுத்துக்கொள்ள வேண்டும்''என்றார்.