புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு வார்டு உறுப்பினர் பெயரில் மக்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''கோவையை எடுத்துக் கொண்டால் குடிதண்ணீர் ஒரு வாரமாக வரவில்லை என்று சிவானந்தா காலனி பகுதியில் பொதுமக்கள் மிகப்பெரிய பிரச்சினையோடு வந்தார்கள். அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த பொழுது சாக்கடை அடைப்புகள் எல்லாம் வருடக்கணக்காக எடுத்து விடாமல் இருக்கிறது. குப்பையை தூர் வாருவதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் சொன்னால் அவர்கள் தூய்மை செய்தாலும் கூட அந்த பகுதியில் இருக்கக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள் அவர்களை மிரட்டுவதாக நாங்கள் அறிகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வீட்டில் அவர்களுடைய காம்பவுண்டுக்குள் ஒரு போர் போடுவதாக இருந்தால் கூட இவ்வளவு பணம் வேண்டும் என வசூல் செய்வதாகத் தெரிகிறது.
வீடு கட்டுகின்றபோது வீட்டின் பணிகள் துவங்கி விட்டால் அதற்கு என்று தனியாக ஒரு அமவுண்ட் வசூல் செய்கிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் பொதுமக்களுடைய நலனுக்காக இம்மாதிரி யார் வந்து அவர்களிடம் லஞ்சமாக பணம் கேட்டாலும், அவர்கள் செய்கின்ற வீட்டு பராமரிப்பு பணிகள், புதிய கட்டடங்கள், புதிய போர்வெல்கள் போடும் பொழுது யார் தொந்தரவு செய்தாலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக தனியாக ஒரு ஹெல்ப் லைன் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இந்த உதவி எண் என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குள்ளாக மக்களுக்கு அறிவிக்கப்படும். யார் இந்த மாதிரி பணம் கேட்டு மிரட்டினாலும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு எங்களிடம் தெரிவிக்கலாம்'' என்றார்.