நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.
இந்நிலையில், கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவில் முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக தற்போது மீண்டும் சோதனை துவங்கியுள்ளது. மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அந்த நிறுவனத்தின் 2 தளங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மீதம் உள்ள ஒரு தளத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த சோதனை தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியானதா என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஈடுபட்ட போராட்டத்தில் உணவு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அதேபோல் பெரும்பாலும் சட்டமன்ற விடுதியில் தங்காத எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டமன்ற விடுதியில் தங்கியிருந்தது. சோதனை தொடங்கியதும் எஸ்.பி. வேலுமணியின் வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்தது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சந்தேகத்தைக் கூட்டியுள்ளது. இதனால் முன்கூட்டியே சோதனையை வெளிப்படுத்திய போலீசார் யார் என்பது குறித்து துறை ரீதியாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.