
கோப்புப்படம்
சேலத்தில் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து, ஓய்வு பெற்ற பெண் ஆசிரியரிடம் வீடு புகுந்து நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனியைச் சேர்ந்தவர் பொன்ராணி (69). ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். இவர் டிச. 5ம் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பொன்ராணி மகிழச்சியுடன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
வீட்டுக்குள் சென்றதும் அந்த மர்ம நபர் பொன்ராணிக்கு ஒரு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்தார். உங்களுடன் வேறு யாரும் வரவில்லையா? பாதிரியார்கள் யாராவது வருகிறார்களா? என பொன்ராணி விசாரித்தபடியே அந்த சாக்லெட் மீது இருந்த காகித உறையைப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்போது சாண்டா கிளாஸ் வேடமணிந்த மர்ம நபர், திடீரென்று பொன்ராணியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொன்ராணி, வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடத்திலும், மர்ம நபர் தப்பி ஓடிய சாலையிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பொன்ராணியிடம் இருந்து நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சாண்டா கிளாஸ் வேடத்தில் இருந்த மர்ம நபர் ஒரு பெண் என்பது தெரிய வந்தது.
மேலும், சம்பவத்தின் போது பொன்ராணியின் வீட்டுக்கு வந்த அந்த மர்மப்பெண், அவரிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இதிலிருந்து அந்தப் பெண், அவருக்கு நன்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும், வாய் திறந்து பேசியிருந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதால் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த பெண்ணின் உருவத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், சாண்டா கிளாஸ் உடைகள் விற்கும் கடைகளிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை. சமீபத்தில் கடைகளில் சாண்டா கிளாஸ் உடையை வாங்கிச் சென்றவர்களின் விவரங்களையும் காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.