போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, இந்து மக்கள் கட்சி நிர்வாகி, அவரது குடும்பமே ஒன்று சேர்ந்து சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, நாடகமாடியது அம்பலமானது.
சிவகங்கை மாவட்டம், புலியூரை சேர்ந்தவர் பாலமுருகன் (32). இந்து மக்கள் கட்சி மண்டல தலைவர். இவரது தம்பி ஆனந்தவேலு (30). மாவட்ட தலைவர். இவர்களது வீட்டில் கடந்த 2017, ஜூலை, 2018 ஜனவரி என 2 முறை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். தனிப்படையும் தீவிர விசாரணை நடத்தியது.
இதில், பாலமுருகன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்காக, அவரே வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதற்கு அவரது தம்பி உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பாலமுருகன், அவரது மனைவி அழகுசாரதி, தம்பி ஆனந்தவேலு, புலியூரை சேர்ந்த டிரைவர் முருகன், கார்த்திக், பனையூர் தினேஷ், மதுரை விஜய் ஆகியோர் மீது திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் முருகன், கார்த்திக் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது நாசமான டூவீலர், தென்காசியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமானது என்றும், பாலமுருகனின் டிரைவர் முருகன் இந்த டூவீலரை திருடியதும் விசாரணையில் அம்பலமானது.