
நெல்லையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் மகேந்திரன் (37) அவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு கதிர்வேல் (7) என்ற மகனும் அக்ஷிதா (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. மகேந்திரன் தனது மனைவி குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக வந்துள்ளார். மகேந்திரனின் மாமனார் ஏற்கனவே இறந்துவிட்டார். அவரது மாமியார் மட்டுமே வி.கேபுரத்தில் உள்ளார்.
மகேந்திரன் திருப்பூரில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமானதால் மருத்துவ சிகிச்சை எடுபடாமல் போனது. இதனால் இயற்கை வைத்தியம் மேற்கொள்ளவே தனது மாமியார் வீட்டில் வந்து தங்கியுள்ளார். வி.கே.புரம் அருகே உள்ள பாபநாசம் மலையில் காரையார் பகுதியில் மஞ்சள் காமாலை நோய்க்கான இயற்கை மருந்துகள் சாப்பிட்டுள்ளார். இதில் நோய் கட்டுப்படாமல் அதிகரித்துள்ளது. மேலும் மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் இனி ஓன்றும் செய்வதற்கில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த மகேந்திரன் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள நாதியில்லாமல் தனியாகி விடுவார்கள் என விரக்தியடைந்துள்ளார். இந்நிலையில் தான் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலறிந்த வி.கே.புரம் போலீசார் காலை 7 மணி அளவில் சம்பவ இடம் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், மகேந்திரன் எழுதிய கடிதம் போலீசுக்கு கிடைத்துள்ளது. அதில், மகேந்திரன் தனக்கு மஞ்சள் காமாலை நோய் தீவிரமாகி ரத்தத்துடன் சேர்ந்ததால் இனி பிழைக்க மாட்டேன் என தெரிந்தது. நான் இறந்துவிட்டால் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லை என்ற காரணத்தினால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்தேன். அதன்பிறகு நான் தூக்கிட்டு கொள்கிறேன். எங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.