தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் பாதிப்பை ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவை எதிர்த்து பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, " மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. நீட் பாதிப்பு பற்றி தமிழ்நாடு அரசு மக்களிடம் கருத்துக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார். மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாக நீட் ஆய்வுக் குழு அமைக்கப்படவில்லை. நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாக இல்லை. எனவே தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு செல்லும்" என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.