“புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை” - நாராயணசாமி
“கொண்டாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்” - கிரண்பேடி
குழப்பமான அறிவிப்புகளால் சுற்றுலாவாசிகள் இடையே குழப்பம் நிலவிவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி வாசிகள் மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாவாசிகளும் புதுச்சேரிக்குப் படையெடுப்பார்கள். புதுச்சேரியின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகள், காந்தி மண்டபம் போன்ற இடங்களில் சுற்றுலாவாசிகள் புத்தாண்டை கொண்டாடுவர். மேலும் ஹோட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் புழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை 2021 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மாறுபாடான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு 98 சதவீதம் குறைந்துள்ளது. நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலோடுதான் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது; சுற்றுலாவும் வளர்ச்சியடைய வேண்டும்; வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்ற நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
புதுச்சேரி மக்கள் இந்த புத்தாண்டை அமைதியாக கொண்டாட வேண்டும். அதேசமயம் விடுதிகளில் டி.ஜே நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகள் விடுதிகளில் தங்கிச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி கிரண்பேடி, புத்தாண்டு கொண்டாடத்தை நடத்தவிடாமல் தடுக்க முயற்சி செய்தார். பல மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல், ஆளுநர் மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்துகொண்டே அதிகாரிகளை மிரட்டும் பணிகளில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபடுகிறார். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லாமல் எதிர்க்கட்சிகள் கிரண்பேடிக்கு ஜால்ரா போடும் கட்சிகளாக உள்ளன. பல்வேறு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளுநர் கிரண்பேடி உருவாக்குகிறார். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியோடும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்தும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.
“புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படும்” என காவல்துறை இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கடற்கரையில் புத்தாண்டு கொண்ட்டாங்கள் நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதிய கரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. எனவே, மத்திய அரசு அளித்துள்ள புதிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர பகுதியில் இன்று (31.12.2020) மதியம் 2 மணி வரை வாகனங்கள் இயல்பாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வையிட் டவுன் பகுதியில் மதியம் 2 மணி முதல் நாளை (01.01.2021) காலை 9 மனி வரை கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வையிட் டவுன் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மூலம் பாஸ் வழங்கப்படும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர். கடற்கரை சாலைக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது, அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுன் முழுவதும் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கடற்கரை சாலையில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இதனிடையே “கரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்படாது. எனவே தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கரோனாவைப் பரப்ப புதுச்சேரிக்கு வர வேண்டாம்” என கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், வெளியூர்களிலிருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்கும்படியும் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெவ்வேறான அறிவிப்புகளால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல இருக்காது என்கின்றனர் சுற்றுலாவாசிகள்.