


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். முன்னதாக பெங்களூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்குத் தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல் சென்றார்.
திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கருப்பு உடை அணிந்த காங்கிரஸ் கட்சியினர் கையில் கருப்பு நிற பேப்பரில் செய்யப்பட்ட பட்டத்தில் 'என் வேலை எங்கே மோடி' என்ற வாசகத்தை எழுதியும், செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதியும், அதே போல் பெண்கள் தங்கள் கைகளில் விறகு குச்சிகளை ஏந்திக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் அனைவரையும் கைது செய்தனர்.