தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதனையடுத்து இந்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். அதே சமயம் இந்த தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குருப் - 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இன்று (03.09.2024) வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். மேலும் தேர்வு தொடர்பான செயல்முறை அறிவிப்புகளுக்கு, https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணையதளத்தில் உள்ள தேர்வு அட்டவணையைப் பார்க்கவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் அண்மையில் பொறுப்பேற்ற எஸ்.கே. பிரபாகர், “டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளைத் தாமதிக்காமல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். போட்டித் தேர்வர்களுக்குக் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் தேர்வு தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். அதோடு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலை தேர்வின் முடிவுகள் நேற்று (02.09.2024) வெளியிடப்பட்டன. இந்த தேர்வு தேர்வு நடைபெற்ற 50 நாட்களில் முடிவுகள் வெளியாகி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.