நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.
அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.