திருவெறும்பூர் மத்திய பாதுகாப்பு படைக்கல தொழிற்சாலை ஹெச்.ஏ.பி.பி (HAPP) என்ற பெயரில், கடந்த 1980ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அந்தப் பெயர் ஒரு திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்பு படைக்கல தொழிற்சாலைக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டம் முடிவடைந்த நிலையில், ஹெச்.ஈ.பி.எஃப் (HEPF) என்ற புதுப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு படைக்கல தொழிற்சாலையின் பொதுமேலாளர் சின்கா தெரிவித்துள்ளார்.
ஹெச்.ஈ.பி.எஃப் என்பதன் விரிவாக்கம் உயர்சக்தி எரிபொருள் தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை, பல்வேறு திறன்கள் கொண்ட, பீரங்கிகளை எதிர்த்து தாக்கக்கூடிய, சேயோ என்ற பீரங்கியை தயாரிக்கும் தன்மை உடைய முதன்மையான நிறுவனமாகும். கரோனா தொற்றால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமல், விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய கச்சாப் பொருட்கள் வந்து சேராததால், தற்போது உற்பத்தியில் தன்னிறைவு நிலையை அடைய முடியாத அளவிற்கு உள்ளது. இருப்பினும் இந்த மாதத்திற்குள் 220 கோடி ரூபாய் இலக்கை எட்டிவிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்திய கடற்படை வழங்கிய பணி ஆணையின் அடிப்படையில், பூனே மாநில தொழிற்சாலையில், தேவைப்படும் அளவிற்கேற்ப ஆர்.ஜி.பி 60 ராக்கெட்டுகள் தயாரிக்கக்கூடிய பணியைத் தொடங்கியுள்ளனர். மூன்று மாதத்தில் 300 ராக்கெட்டுகள் செய்வதற்கான இலக்கை விரைவில் எட்டிவிடுவோம். 270 ராக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. ஏ.எம்.கே 339 வெடிமருந்துகள், உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு டிசம்பருக்குள் அதற்கான பணிகளைத் துவங்க உள்ளனர். திருச்சியில் 70% வெடிமருந்து பொருட்களும், ஜபல்பூர், நாக்பூர் ஆகிய படைக்கல தொழிற்சாலைகளில் 30 சதவீதமும் தயாரிக்கப்பட உள்ளது.
2022ஆம் ஆண்டு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, பாரதப் பிரதமர் நாட்டுக்கு இதனை அர்ப்பணிப்பார். மேலும் ஏ.எம்.கே என்ற வெடிமருந்து உற்பத்தியானது 25 வருடத்திற்கு முன்பு ரஷ்யாவின் திட்டமாக இருந்தது, தற்போது இந்தியாவின் திட்டமாக மாறியுள்ளது. அதற்குத் தேவையான மூலப் பொருட்களை இந்தியாவிலேயே திரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மூலப்பொருள்களை சேகரிப்பதும், வெடிமருந்துகளை முழுமையாக தயாரிப்பதும், வெளிநாடுகளில் இருந்து எந்த மூலப்பொருள்களையும் பெறாமல் உள்நாட்டிலேயே இதற்கான மூலப்பொருள்களைப் பெறுவது, வெடி மருந்துகளை தயாரித்து அதில் தன்னிறைவு அடைவது என்பன முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.