இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வடமாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையில், இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிந்துகொள்ள மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் திருச்சி பெல் நிறுவனம் ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடந்து வந்ததாகவும், 2003க்கு பிறகு ஆக்சிஜன் தயாரிக்கும் பணியானது நிறுத்தப்பட்டுள்ளதால், உடனடியாக அதைத் தயாரிக்க பழுதடைந்து கிடைக்கக்கூடிய இயந்திரங்களில் மத்திய அரசு மீண்டும் புனரமைத்து ஆக்சிஜன் தயாரிப்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி எம்.பி. சிவா, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், பெல் நிறுவன இயந்திரங்களைப் பழுது பார்த்து மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்க மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆக்சிஜன் தயாரிப்பதற்கு நல்ல சூழ்நிலை இருக்கும் பொழுது அதை ஏன் மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறது. மே 19ஆம் தேதி இது குறித்த விரிவான பதில்களை மத்திய அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.