Skip to main content

'திமுக அதில் அவசரம் காட்டத் தேவை என்ன?' - ஜெயக்குமார் கேள்வி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
'What is the need for DMK to show urgency in this?'- Jayakumar asked

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில், திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

'What is the need for DMK to show urgency in this?'- Jayakumar asked

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுகவில் எங்களுக்காக பயந்து அவசரமாக இறுதிப்பங்கீடு வரை சென்று உடனே ஒப்பந்தம், உடனே கையெழுத்து என வெளியிடுகிறார்கள். இதில் அவசரம் காட்ட வேண்டியதற்கான தேவை என்னவென்றால், திமுகவை விட்டால் அடுத்த ஆப்ஷன் அதிமுகவிற்கு போய்விடுவார்கள். அந்த ஆப்ஷன் எந்த கட்சிக்கும் வரக்கூடாது என்ற அடிப்படையில் பயந்து காலில் விழாத குறையாக கெஞ்சி இன்று அவசர அவசரமாக கூட்டணியை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இது அவர்களின் தோல்வி பயம் அல்லது எங்கள் மீதுள்ள அச்சத்தால் நிகழும் அவசரத் தன்மையை காட்டுகிறது .தேர்தல் மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு செய்யப்படலாம். இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது. 10 நாட்கள் இருக்கும் நிலையில் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் 'கத்திரிக்காய் மலிந்தால் கடைத் தெருவுக்கு தான் வந்து தான் ஆக வேண்டும்' என்பதுபோல் யார் யார் எங்கெங்கு ஜம்ப் பண்ணி எங்கெங்கே போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் பத்து நாட்களில் தெரிந்துவிடும். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதற்காக நிறைய கட்சிகள் இருக்கிறது. ஆனால், எந்தெந்த கட்சிகள் உள்ளது என இப்போது சொல்வது உசிதமாக இருக்காது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் பத்து நாள் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டிப்பாக எங்கள் தலைமை எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் இருக்கிறது என அறிவிப்பார்கள்''என்றார். 

சார்ந்த செய்திகள்