புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளை ஆண்ட அதிமுகவும், 6 வார்டுகளை ஆளும் திமுகவும் ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தனர். சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றவரும் அதிமுக ஆதரவு நிலையில் இருந்ததால் அதிமுகவின் பலம் 9 கவுன்சிலர்கள் ஆனது. திமுகவுக்கு 6 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ சுயேச்சை வேட்பாளர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரையும் மணப்பாறை பகுதியில் தங்கவைத்து பதவி ஏற்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்தார்.
அதேபோல பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் போது கவுன்சிலர்களை கடத்த வாய்ப்புள்ளதாகக் கூறி அதிமுக தரப்பு நீதிமன்றம் மூலம் கூடுதல் பாதுகாப்பும் கேட்டிருந்தனர். அதன்படி மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையில் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திரண்ட திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளு செய்ததுடன் போலிசாரின் தடையை மீறி செல்ல முயன்றதால் தடுக்க முயன்றபோது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி செய்தனர். கல்வீச்சில் போலீசார், திமுகவினர் என 8 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் போலீசார் மயங்கி சாய்ந்தனர். இந்த தடியடி கலவரங்களுக்கிடையே திமுக கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில் அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இந்த கலவரத்தில் ஆளும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்பட திமுக நிர்வாகிகளே நேரடியாகக் கலந்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் கலவரம், தடியடி குறித்து காவல்துறையின் தலைமை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக நடந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் திமுக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசாரை ஒருமையில் பேசும் போது ஆட்சியில் உள்ள தலைவர்களையும் அவமரியாதையாக சில திமுகவினர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட போலீசார் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.