சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக நேற்று அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குற்றச்சாட்டு பதிவைத் தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ளக்கூடாது தள்ளிவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
'உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு வரும் 12ஆம் தேதி தான் விசாரணைக்கு வர இருக்கிறது. வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் 14 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை இன்று (08/08/2024) நேரில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொளி காட்சி மூலம் அவரை ஆஜர்படுத்துங்கள்' என நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். நீதிமன்றம் வளாகத்திற்கு வரும் பொழுது சிகிச்சையில் இருப்பதற்கான சிரஞ்சு கையில் மாட்டிய நிலையில் வந்திருந்தார். அதைப்பார்த்த நீதிபதி அல்லி ,' உடல்நலக் குறைவில் உள்ளீர்கள் நாற்காலியில் அமருங்கள்' என்று அறிவுறுத்தினார். குற்றச்சாட்டுகளை நான் படிக்கிறேன் நீங்கள் ஆம் அல்லது இல்லை என மறுப்பு தெரிவிக்கலாம் என்று குற்றச்சாட்டுகளை முதலில் நீதிபதி அல்லி ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பிறகு தமிழில் வாசித்தார்.
அதில்,'2011 முதல் 2016 வரை தமிழக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பணம் வாங்கி உள்ளீர்கள். இதற்கான முழு ஆதாரம் உள்ளது. இந்த பணம் அனைத்தும் உங்கள் மனைவி மேகலா மற்றும் உங்கள் தம்பி அசோக்குமார், தம்பி மனைவி மற்றும் உதவியாளர் உட்பட உதவியாளர்கள் மூலம் பெற்றுள்ளது. இதற்கான மின்னணு ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை சார்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தவறு என்று தெரிந்திருந்தே இந்த பணத்தை பெற்றுள்ளீர்கள். லஞ்ச பணத்தை பெற்றதன் காரணமாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார் நீதிபதி அல்லி.
அப்பொழுது செந்தில் பாலாஜி, 'இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக' மட்டும் முதலில் சொல்லியிருந்தார். அதன் பிறகு செந்தில் பாலாஜி தரப்பில் செந்தில் பாலாஜியிடம் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்பட்டது. அவர் அதை பார்த்து வாசித்தார். அதில், 'இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். தன் மீது தவறாக புனையப்பட்ட வழக்கு இது. அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கு. எனவே இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த தவறும் செய்யவில்லை. இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் முழுமையாக மறுக்கிறேன்.எதிர்வரும் காலங்களில் இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடங்கும் பொழுது சாட்சிகளிடம் தான் குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்' என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி 'இது குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான நாள் என்பதால் இன்று உங்களுடைய எந்த தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய இயலாது' என்றார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 16 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.