நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (26/07/2021) அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம். நீர்ப்பற்றாக்குறையைப் போக்க காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தக் கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். அ.தி.மு.க. தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை; தேர்தல் சமயத்தில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் கட்சியிலிருந்து வெளியே சென்றனர்" எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மட்டும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிலையில், அவருடன் உடனிருந்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.